சேலம் மாவட்டம் குகையில் உள்ள அம்பலவான சுவாமி கோயிலின் கல் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 2 மாதங்களில் தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சேலம் மாவட்டம் குகை பகுதியில் உள்ள அம்பலவான சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கல் மண்டபம், கோயில் திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களின்போதும் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், இந்த கல் மண்டபம் தற்போது ஆபத்தான நிலையிலும், முறையான பராமரிப்பு இல்லாத நிலையிலும் உள்ளது. கல் மண்டபத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நில நிர்வாக ஆணையரிடம் மனு அளித்தேன்.
இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், கல் மண்டபத்தில் ஓய்வு எடுக்ககூடிய மக்கள் மேல் இடிந்து விழும் நிலையிலேயே உள்ளது. எனவே கல் மண்டபத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் அறநிலைய துறை சார்பில், கல் மண்டபத்தை மறு சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மனுதாரருக்கு 8 வாரங்களில் பதிலளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.