உக்ரைன் மீதான நமது ராணுவ நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், போராடுபவர்கள் தேச துரோகிகள், தேசத்தின் மீதான கறை. அவர்களை வாயில் நுழைந்த பூச்சியை துப்புவது போல் உண்மையான ரஷ்யர்கள் துப்பிவிடுவார்கள். சமூகம் அதன் பின்னர் மேம்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசினார்.
உக்ரைன் மீது கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். அதன்பின்னர் 23வது நாளாக இன்றும் தாக்குதல் நடைபெறுகிறது.
உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி ராணுவ நடவடிகை தொடரும் இது உக்ரைனிலிருந்து நாசி சக்திகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கிடையில் உள்நாட்டிலேயே ரஷ்ய போருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
இந்தச் சூழலில் நேற்று ரஷ்ய அதிபர் புதின் நாட்டு மக்கள் முன் நேரில் உரையாற்றினார். பிரம்மாண்ட கூட்டத்தின் மத்தியில் பேசிய அவர், ”உக்ரைன் மீதான நமது ராணுவ நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், போராடுபவர்கள் தேச துரோகிகள், தேசத்தின் மீதான கறை. அவர்களை வாயில் நுழைந்த பூச்சியை துப்புவது போல் உண்மையான ரஷ்யர்கள் துப்பிவிடுவார்கள். சமூகம் அதன் பின்னர் மேம்படும்.
இயல்பான, அவசியமான நம் சமூகத்தின் சுய சுத்திகரிப்பு நம் நாட்டை வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன். ஒற்றுமையால் நாம் நம் நாடு எதிர்கொள்ளும் எத்தகைய சவால்களையும் முறியடிக்க முடியும். தேச துரோகிகள் நம்மில் இருந்து அவர்களாகவே விலகி ரஷ்ய சமூகத்தை தூய்மைப் படுத்திவிடுகின்றனர். சிலர் தங்களின் வேலையை துறக்கின்றனர். சிலர் நாட்டை விட்டே வெளியேறுகின்றனர். அவர்கள் போகட்டும். அப்படித்தான் நாடு தூய்மையடையும்” என்றார்.
ரஷ்ய அதிபரின் பேச்சு நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது 10 நிமிடங்களுக்கு தடங்கல் ஏற்பட்டது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறால் அவ்வாறு நிகழ்ந்ததாக ரஷ்ய அரசு தரப்பில் விளக்கப்பட்டது.
அதிபரின் உரை முடிந்த பின்னர், ரஷ்யா அண்மையில் கொண்டு வந்த அவதூறு தடுப்புச் சட்டத்தின் படி விசாரணைக்கு உட்படுத்தப்படும் முதல் நபர் பற்றி அறிவித்தது. விசாரணை முடிவுக்கு வந்ததும் அவர் மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.