Site icon ழகரம்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

கடந்த 2021 நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளை ஒன்று ரூ.50 அதிகரித்துள்ளது. 2021 அக்டோபர் 6 ஆம் தேதிக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் விலையுயர்வைக் கண்டித்து பேசினர்.

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ’5 மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயரும் என்றே எதிர்பார்த்தோம். அது நடந்துவிட்டது’ என்றார்.

கொல்கத்தா எம்.பி. சுதீப் பந்தோப்தயா பேசுகையில், ’அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்று கூறினார். அவையிலிருந்து காங்கிரஸ், திமுக, திரிணமூல், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையிலும் அவை தொடங்கியவுடன் விதி எண் 267-ன் கீழ் விவாதிக்க அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. ஆனால், அவைத் தலைவர் அனுமதி தராத காரணத்தால், அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, மாநிலங்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அகிலேஷ் யாதவ் கண்டனம்: இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உ.பி. எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக அரசிடமிருந்து மக்களுக்கு இன்னொரு பரிசு. இனி லக்னோவில் ஒரு சிலிண்டர் ரூ.1000-க்கு விற்பனையாகும், பாட்னாவில் ரூ.1000-க்கும் மேலாக விற்பனையாகும். தேர்தல் முடிந்துவிட்டது, விலைவாசி உயர்வு வந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version