பதிவுத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.13,218கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ள தாகவும், பதிவுத் துறை அலுவலகங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, எம்எல்ஏ-க்கள் செங்கம் மு.பெ.கிரி, குடியாத்தம் அமுலு, வானூர் சக்கரபாணி, குளச்சல் ஜே.ஜி.பிரின்ஸ், பேரவைதுணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர், சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம், புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் அமைத்தல், அரசுக் கட்டிடம் கட்டித் தருதல் போன்ற கோரிக்கைகளை எழுப்பினர். இவற்றுக்குப் பதில் அளித்துபதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்திபேசும்போது, ‘‘பதிவு அலுவலகத்தைப் பொறுத்தவரை 50 ஆண்டுகளுக்குப்பின் சில அலுவலகங்கள், தாலுகா விட்டு தாலுகா,மாவட்டம் விட்டு மாவட்டம் என முறையின்றி அமைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலக எல்லைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
சார் பதிவாளர் அலுவலகம் சம்பந்தப்பட்ட தாலுகாவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். மக்கள் தொகை, நிலப் பரப்பைபொறுத்து ஓரிடத்தில் இரு அலுவலகங்களைக்கூட அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்ததும் தேவைக்கேற்ப முடிவெடுக்கப்படும்.
பதிவுத் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, கரோனா, மழை வெள்ளக் காலங்களை கடந்து ரூ.13,218 கோடி பதிவு வருவாய் பெறப்பட்டுள்ளது. வணிகவரித் துறை முதலிடத்தில் இருந்தாலும், அதிக நிதியைப் பெற்றுள்ளோம். எனவே, தேவைப்படும் இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்கள் கட்டித் தரப்படும்’’ என்றார்.