
தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி என 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவற்றில் தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஏ.சி.அருணாவை கடந்த 2011-ல் கொலை செய்த வழக்கு முக்கியமானது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 வழக்குகள் உள்ளன. பல முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீராவி முருகனைப் பிடிக்க தனிப்படை போலீஸார் நெல்லையில் முகாமிட்டிருந்தனர். போலீஸில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக நீராவி முருகன் அடிக்கடி செல்போன்களையும், சிம் கார்டுகளையும் மாற்றியிருக்கிறார். இதுவரை 20-க்கும் மேற்பட்ட செல்போன்களையும் 70-க்கும் அதிகமான சிம் கார்டுகளையும் அவர் பயன்படுத்தியிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை உதவி ஆய்வாளர் எஸ் ராஜன் தலைமையிலான போலீசார் அவரை பிடிக்க கடும் போராட்டம் நடத்தினர். காரில் வைத்திருந்த அரிவாளால் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜன் காவலர்கள் சத்யராஜ் ஷேக் மணி ஆகியோரை தாக்கிவிட்டு முருகன் வனப் பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளார். துரத்தி சென்ற உதவி ஆய்வாளர் வேறுவழியின்றி முருகன் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நீராவி முருகன் உயிரிழந்ததாக தெரிகிறது.
காயமடைந்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்த முருகனின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.