‘தொலைக்காட்சிகளில் மட்டும்தான் மத சகிப்பின்மை மிகைப்படுத்தப்படுகிறது’ என்று ஈஷா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து:
“நாம் சில விஷயங்களை மிகைப்படுத்துகிறோமோ எனத் தோன்றுகிறது. சில விஷயங்கள் பற்றி தொலைக்காட்சிகளில் காரசார விவாதங்களை நடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், எந்த ஒரு தெருவிலும் அப்படியான விவாதத்தை பார்த்ததில்லை. டெல்லியிலோ இல்லை நாட்டின் எந்த ஒரு கிராமத்திலோ சென்று பாருங்கள். அங்கு சகிப்பின்மையும், வன்முறையும் இருக்காது. வன்முறையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தொலைக்காட்சிகளில் மட்டும்தான் மத சகிப்பின்மை மிகைப்படுத்தப்படுகிறது. மத விவகாரங்கள் பற்றி தொலைக்காட்சிகளில் மிகைப்படுத்தப்பட்ட விவாதங்களை ஊக்குவிக்கக் கூடாது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் கூட விவாதிக்கப்படுகின்றன. சட்டம் தன் கடமையை செய்யவாவது அவகாசம் அளிக்க வேண்டாமா. சர்ச்சைக்குரிய விவகாரம் சம்பந்தப்பட்ட இடத்தில் தேர்தல் வரவிருந்தால் போது அரசியல் கட்சிகள் அதைவைத்து அரசியல் செய்கின்றன.
நான் கல்லூரியில் பயின்ற காலங்களில் மதக் கலவரங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. ஆனால் இந்த 25 ஆண்டுகளில் மதக் கலவரங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. கடந்த 10 வருடங்களில் பெருமளவில் மதக் கலவரங்கள் நடைபெறவே இல்லை. இது ஒரு நேர்மறையான விஷயம்.
சிலர் எந்நேரமும் ஏதாவது பிரச்சினையை தேடுகின்றனர். சட்டம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். இப்போது அனைத்து சமூக மக்களுமே தங்கள் வாழ்க்கையை நோக்கி பார்வையை திருப்பியுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, நிம்மதியான வாழ்க்கை என்று அவர்களின் எண்ணம் முன்னேறியுள்ளது. எந்த சமூகமுமே தனது மக்கள் கலவரங்களில் ஈடுபடுவதை விரும்பவில்லை. யாருக்கும் நேரமும் இல்லை. அதுமாதிரியான எண்ணமும் இல்லை”
இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.
அண்மையில் டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் நடந்த வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் இவ்வாறாக பேசியிருந்தார்.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.