கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மாணவி உயிரிழப்பைத் தொடர்ந்து, வன்முறைக் கும்பலால் உருக்குலைந்து போன தனியார் பள்ளியில், சிபிசிஐடி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மாணவியின் உடல் நேற்று மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 16 வயதான பிளஸ்-2 மாணவி, பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்க பெற்றோர் மறுத்தனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி பள்ளி முன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் பள்ளிக் கட்டிடம் சேதமடைந்ததுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், காவல் துறை வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சில் டிஐஜி உள்ளிட்ட காவல் துறையினர் காயமடைந்தனர்.
பின்னர், கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு, வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவம் நடந்த அன்றே உள்துறைச் செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களும், கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொம்மையை கொண்டு ஆய்வு
இதற்கிடையில், சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையிலான குழுவினர், பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மாணவி தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற குழுவினர், அவர் மாடியில் இருந்து விழுந்ததாக பள்ளித் தரப்பில் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, மாணவி போன்ற உருவபொம்மையைத் தயாரித்து, 2, 3-வது தளத்திலிருந்தும், கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்தும் 3 முறை கீழே தூக்கிப்போட்டு, மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் இடத்தின் தன்மை, விழுந்த இடத்தின் தூரம் உள்ளிட்டவற்றைப் பதிவுசெய்து கொண்டனர்.
பின்னர், மாணவி தங்கியிருந்த விடுதியின் அறை, அவர் பயன்படுத்திய பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். நண்பகல் 12 மணிக்கு பள்ளிக்கு வந்த சிபிசிஐடி குழுவினர், சுமார் 3 மணி நேரம் பள்ளி வளாகத்தில் ஆய்வு நடத்தினர்.
தொடர்ந்து, மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசுக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
ஏற்கெனவே மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, அவரது பெற்றோரிடம் அறிக்கை வழங்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை போலியானது என்று கூறிய பெற்றோர், உடலை வாங்க மறுத்து, தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதில், சிறப்பு மருத்துவக் குழு அமைத்து, மறு பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவப் பேராசிரியர்களான திருச்சி ஜூலியானா ஜெயந்தி, விழுப்புரம் கீதாஞ்சலி, சேலம் கோகுலரமணன் மற்றும் ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் சாந்தகுமாரி ஆகியோரைக் கொண்ட குழுவை, தமிழக அரசு அமைத்தது.
இக்குழுவினர் நேற்று சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையிலான விசாரணைக் குழு மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்தினர். அதன் அறிக்கை நீதிமன்றத்தில் வருவாய்த் துறை மூலம் ஒப்படைக்கப்பட உள்ளது.
பிரேதப் பரிசோதனையில் மாணவியின் பெற்றோர் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோரிடம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரேதப் பரிசோதனை முடிந்து, அதன் அறிக்கையை நீதிமன்ற உத்தரவுபடி, பெரியநெசலூர் கிராமத்தில் வசிக்கும் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்க கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
ஆட்சியர், எஸ்.பி. இடமாற்றம்
இதற்கிடையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரை இடமாற்றம் செய்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று உத்தரவிட்டார்.
அவரது உத்தரவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக, வேளாண் துறை கூடுதல் இயக்குநர் ஸ்ரவண்குமார் ஜடாவத் நியமிக்கப்படுகிறார். கள்ளக்குறிச்சி ஆட்சியராக இருந்த பி.என்.ஸ்ரீதர், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்ட இயக்குநராக நியமிக்கப்படுகிறார். அவர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணியிட மாற்றம்செய்து, உள்துறைச் செயலர் கே.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.செல்வகுமாருக்குப் பதில், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் பி.பகலவன் நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வுக் குழு
பள்ளியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
வன்முறைக்குக் காரணமான வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கியவர்கள், பொய்யான செய்திகளைப் பரப்பியவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு தலைமையிலான இக்குழுவில், ஆவடி 5-வது பட்டாலியன் கமாண்டன்ட் எஸ்.ராதாகிருஷ்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் (சென்னை) எம்.கிங்ஸ்லின், விழுப்புரம் தலைமையிட கூடுதல் கண்காணிப்பாளர் திருமால், திருப்பத்தூர் தலைமையிட கூடுதல் கண்காணிப்பாளர் முத்து மாணிக்கம், நாமக்கல் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு, வன்முறையின் பின்னணியில் உள்ள சதி குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளும். மேலும், மோதலுக்குக் காரணமான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியவர்கள், போலி செய்திகளைப் பரப்பியவர்களைக் கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்ளும். அதேபோல, போலி செய்திகளைப் பரப்பிய யூடியூபர்கள், ஊடக விசாரணை நடத்தியவர்களைக் கண்டறிந்து, அந்த யூடியூப் சேனல்களை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று டிஜிபி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். அந்த தகவல்கள் உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்படும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
கள்ளக்குறிச்சி வன்முறைச் சம்பவம் தொடர்பாக நேற்று காலை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதில், தலைமைச் செயலகத்தில் இருந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உள்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வன்முறைச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், சம்பவம் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் கல்வி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.