செய்திகள்இலங்கை

இலங்கையின் 9-வது அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

இலங்கையின் 9-வது அதிபராக ரணில் விக்ரமசிங்க(73) நேற்று பதவியேற்றார். ‘நான் ராஜபக்சவின் நண்பர் அல்ல’ என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இலங்கையின் புதிய பிரதமராக, மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்த்தன இன்று (ஜூலை 22) பதவி ஏற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், அதிபராக இருந்த அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலகினர். இதையடுத்து, புதிய அதிபர் தேர்வு இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 223 உறுப்பினர்களில், 134 பேர் ஆதரவுடன் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க(73) வெற்றி பெற்றார்.

அவர் நேற்று இலங்கையின் 9-வது அதிபராகப் பதவியேற்றார். அவருக்கு இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துகொண்டார்.

அதிபராகப் பதவி ஏற்ற பின்னர், கொழும்புவில் உள்ள பழமையான புத்த கோயில்களில் ஒன்றான கங்காராமா கோயிலுக் குச் சென்று ரணில் விக்ரமசிங்க வழிபட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “நான் ராஜபக்சவின் நண்பர் அல்ல. மக்களின் நண்பர். முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுடன் நான் பணியாற்றியுள்ளேன். அவர் வேறு கட்சியைச் சேர்ந்தவர். நான் வேறு கட்சியைச் சேர்ந்தவன்.

என்னைப் பொறுத்தவரை, மற்றொரு கட்சியிலிருந்து அதிபராகப் பணியாற்றுவதால், நான் மகிந்த ராஜபக்சவின் நண்பர் அல்ல. மக்கள் விரும்பும் மாற்றத்தை நான் அளிப்பேன்.

எனது ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தும் வாய்ப்பை ஆராய்வேன். அரசுக் கட்டிடங்களை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை அமைதி யான முறையில் நடத்த வேண்டும். அது அரசைக் கவிழ்க்கவோ, வீடுகளை எரிக்கவோ அல்லது முக்கிய அலுவலகங்களை ஆக்கிரமிப்பதற்காகவோ நடத்தப்படக் கூடாது. அது ஜனநாயகம் அல்ல, சட்டவிரோத செயலாகும்” என் றார்.

மின்சாரம் துண்டிப்பு: இலங்கை அதிபரின் பதவியேற்பு விழாவை டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டது. ஆனால், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந் ததும், மின்சார இணைப்பு துண்டானது. வழக்கமாக மின் துண்டிப்பு ஏற்பட்ட 2 நிமிடங்களில் இயங்கும் ஜெனரேட்டர்களும், நேற்று இயங்கவில்லை.

அதிபர் பதவியேற்கும் நேரத்தில் சுமார் 10 நிமிடங்கள் மின் தடை ஏற்பட்டதால், அதிபர் பதவியேற்பு விழாவை டி.வி. சேனல்களால் நேரடியாக ஒளிபரப்ப முடியவில்லை. இதுகுறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்துகிறது.

இந்நிலையில், ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்த்தன, இலங்கையின் புதிய பிரதமராக இன்று (ஜூலை 22) பதவி ஏற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button