செய்திகள்இலங்கை

இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு

நெருக்கடி நிலையை சந்தித்துள்ள இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு மேல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டல்லஸ் அழகப்பெரும ஆகியோர் இந்த போட்டியில் இருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபரை தேர்வு செய்யும் வகையில் வாக்குகளைப் பதிவு செய்தனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 225 எம்.பி.க்களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 பேர் வாக்களித்தனர். இவற்றில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெரும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளும் அழகப்பெரும 82 வாக்குகளும் பெற்றனர். அனுரா குமார திசநாயகா 3 வாக்குகள் பெற்றார். இதனால் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அதிபராகியுள்ளார்.

இலங்கையில் கடந்த 1993 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றம் மூலம் அதிபர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க 2024 நவம்பர் வரை ஆட்சியில் இருப்பார்.

தப்பியோடிய கோத்தபய: முன்னதாக, இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. அதிபர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்திருந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா நேற்று திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். நாட்டு நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாகவும், தனது ஆதரவை, போட்டி வேட்பாளர் டல்லஸ் அழகப்பெருமவுக்கு தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button