Site icon ழகரம்

இலங்கை நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க பலரும் முன்வராத நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவே அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு என பெரும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்நியச் செலவாணி கையிருப்பு இல்லாததால் அன்றாடம் பொருட்களை வாங்க கடன் வாங்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாத திவால் ஆகும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பம்தான் காரணம் எனக் கூறி, அவர்கள் அனைவரும் பதவிவிலக வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர். இதன் எதிரொலியாக கடந்த மாதம் இலங்கை அமைச்சரவையிலிருந்து அனைவரும் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச, நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை அமைத்தார். அதில் ஏற்கெனவே நீதித் துறை அமைச்சராக இருந்த அலி சப்ரி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். எனினும், கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் பணியை எதிர்கொள்ள வேண்டியிருந்த சூழலில் ஒரே நாளில் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் அலி சப்ரி.

ஆனால், அவரது ராஜினாமாவை கோத்தபய ஏற்கவில்லை. இதையடுத்து நிதியமைச்சர் பதவியில் தொடர்ந்த அலி சப்ரி, இலங்கையின் சார்பில் பன்னாட்டு நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கொழும்பு முழுவதும் வன்முறை பரவியது. இதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். 4வது முறையாக இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார்.

புதிய அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். ஆனால் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் முன் வராததால், பல நாட்கள் கடந்து விட்டது. அதேசமயம் நிதியமைச்சர் பதவியை தங்கள் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு எம்.பி.க்கு வழங்க கோத்தபய திட்டமிட்டு வந்தார். அதற்கு ரணில் விக்கிரமசிங்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தநிலையில் இலங்கை நிதியமைச்சர் பொறுப்பை அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று ஏற்றார். இதற்கான ஒப்புதலை அதிபர் கோத்தபய ராஜபக்சே வழங்கியுள்ளார்.

நிதித்துறையை தானே கவனித்துக் கொள்வதாகவும், இலங்கை சார்பாக சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க போவதாகவும் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version