பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மாயாஜால வித்தைகளை செய்து மாற்றிவிட முடியாது என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில் அவர் தெரிவித்ததாக, “மனித உரிமை நிலவரங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் தனிமனிதரில் தங்கியிருப்பதில்லை. புதிய ஒருவர் பதவிக்கு வருவதால் மாத்திரம் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது.
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக மாயாஜால வித்தைகளை செய்து மனித உரிமைகள் செயற்பாடுகளில் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கூட போலீஸ் வன்முறைகள் குறைந்திருந்த போதிலும் முற்றாக இல்லாமல் போகவில்லை. மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்கள் எனும்போது அது தனிமனிதரில் தங்கியிருப்பதில்லை. ஒட்டுமொத்த மக்களின் மனநிலையில் மாற்றங்கள் வர வேண்டும். குறிப்பாக, பொறிமுறையில் மாற்றம் ஒன்றே நாட்டுக்கு அவசியம்.”
“இம்மாதம் 9ஆம் தேதி அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. மாறாக அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கியதாகவும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் பலரை போலீசார் கைது செய்துவருகிறார்கள். நியாயமான சந்தேகத்தின் அடிப்படையிலோ அல்லது ஆதாரத்தின் அடிப்படையிலோ இந்த கைதுகள் இடம்பெறவில்லை என்பதுபோலவே எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன” என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.