செய்திகள்தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? – காவல்துறைக்கு ராமதாஸ் கண்டனம்

மாற்றுத்திறனாளிகளை ஏதோ பயங்கரவாதிகளைப் போலக் கருதி காவல்துறை தடுத்து கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொகையினை உயர்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டம் காரணமாக மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல ஊர்களில் இருந்து சென்னை புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் மீதான கைது நடவடிக்கை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.1,000லிருந்து ரூ.3,000 ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு ரூ.1,500லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பாமக ஆதரிக்கிறது.

இந்தப் போராட்டத்திற்காக சென்னைக்கு புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் ரயில் நிலையங்களில், ஏதோ பயங்கரவாதிகளைப் போலக் கருதி காவல்துறை தடுத்து கைது செய்துள்ளது. சென்னையிலும் கைது வேட்டை தொடர்ந்தது. காவல்துறையினரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது!

மாற்றுத்திறனாளிகள் அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவது அவர்களின் உரிமை. கடவுளின் குழந்தைகளான அவர்களை தடுப்பதும், தாக்குவதும் மன்னிக்க முடியாதவை. மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும், உணர்வுகளையும் மதித்து அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button