காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சமீபத்தில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பண்டிட்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் பாதுகாப்பு படையினர் 15 பேர் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்கிழமையன்றும் ஒரு ஆசிரியை கொல்லப்பட்டார். காஷ்மீர் பண்டிட்கள் 18 நாளாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், பாஜக 8 ஆண்டு ஆட்சியைக் கொண்டாடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் அவர்களே, இது திரைப்படமல்ல, காஷ்மீரின் இன்றைய உண்மை நிலை’’ என்று கூறியுள்ளார்.