பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றியுள்ளது. இன்று பதவியேற்பு விழா நடந்தது. வழக்கமாக பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும். ஆனால், இந்த முறை பகத் சிங்கின் கிராமமான கத்கர் கலனில் நடைபெற்றது. பகவந்த் மானுடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
பதவியேற்ப்பின் போது :
பகத் சிங்கின் கிராமத்தில் பதவியேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முன்பெல்லாம் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிகள் ஆளுநர் மாளிகையிலும், கிரிக்கெட் மைதானங்களிலும் நடைபெறும். ஆனால், நான் இங்கு கத்கர் கலனில்தான் இவ்விழா நடக்க வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் என் மனதில் பகத் சிங்குக்கு தனி இடம் உண்டு.
வேலைவாய்ப்பின்மையை சரி செய்ய நிற்கிறோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான் நான் முதல்வராக இங்கு நிற்கிறேன். டெல்லியில் உள்ள மொஹல்லா மருத்துவமனைகள், அரசுப் பள்ளிக்கூடங்களை நிபுணர்கள் பலரும் ஆவலுடன் பார்த்துச் செல்கின்றனர். அது மாதிரியான நிலையை நாங்கள் பஞ்சாப்பிலும் உருவாக்குவோம்.
பஞ்சாப் வரலாற்றில் ஒரு தங்கமான அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.ஆம் ஆத்மியை தோற்றுவித்து அதை இன்று பஞ்சாப் வரை கொண்டுவந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.பகத் சிங் பிறந்த மண்ணுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இன்று அவருக்கு அவருடைய சொந்த கிராமத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளேன். பஞ்சாப் மக்கள் நலனுக்காகப் பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன். உண்மையான ஆட்சியாளர்கள் மக்களின் மனங்களில் நின்று ஆட்சி செய்வார்கள். நாங்கள் அப்படிப்பட்ட ஆட்சியை பஞ்சாப்பில் நல்குவோம். பஞ்சாப்பில் இப்போது ஒரு முதிர்ச்சியடைந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது என்பதை மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.