
தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் அகற்றும் போராட்டத்தை நாளை நடத்தவுள்ளதாக புதுச்சேரி சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
புதுச்சேரி கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் தமிழர் களம் அலுவலகத்தில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு: ”புதுவையில் அமைக்கப்பட்டு வரும் தியாகச் சுவரில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சாவர்க்கர் பெயரை பதித்துள்ளார். சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை. அவர் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திரட்டிய படைக்கு எதிராக செயல்பட்டவர். சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக செயல்பட்டு துரோகம் இழைத்தவரின் பெயரை தியாக சுவரில் பதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, புதுவையில் உள்ள கட்சி, சமூக அமைப்புகளின் சார்பில் 30ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு சின்னக்கடை மணிக்கூண்டு அருகே ஒன்றுகூடி ஊர்வலமாக சென்று 75வது சுதந்திர தினத் தியாகப் பெருஞ்சுவரில் உள்ள சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது” என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.