புதுச்சேரியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு 7 நாட்களாகியும், கொலையாளி கைது செய்யப்படவில்லை என்று கூறி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சன்னியாசி குப்பம் பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற கல்லூரி மாணவியை ஒரு வாரத்துக்கு முன்பு முகேஷ் என்ற இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்தார். இது தொடர்பாக திருபுவனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள முகேஷை தேடி வருகின்றனர்,
இந்த நிலையில், ஒருதலைபட்சமாக காதலித்து வந்து, அந்த மாணவியை கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கொலையாளியை 7 நாட்கள் ஆகியும் கைது செய்யாமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் புதுச்சேரி அண்ணா சிலை அருகே கையில் பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலச்செயலர் எழிலன், துணைத்தலைவர் முரளி உள்ளிட்டோருடன் இறந்த மாணவியின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், “கல்லூரி மாணவியை கொலை செய்து 7 நாட்களாகியும் குற்றவாளியை போலீசார் கைது செய்யாமல் மெத்தனமாக உள்ளனர். இச்சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை தேவை” என்று கூறினர்.
இதனிடையே, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகாவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மாணவிகள் மனு தந்தனர்.
இந்த வழக்கு குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “கொலையாளி முகேஷ் மீது பாரில் வெடிக்குண்டு வீசியது உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தமிழகப் பகுதியில் கொலையாளி பதுங்கியிருக்கலாம். தனிப்படை அமைத்துள்ளோம். தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளோம்” என்று கூறினர்.