தமிழகத்தில் 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியின்றி வெற்றி பெற்றவர்கள் தவிர்த்து 12,602 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டி உள்ளது.
இவர்களை தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் ரஜினியின் அரசியல் வருகைக்காக காத்திருந்து இதுவரை வாக்களிக்காத நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தனது முதல் வாக்கினை செலுத்தினார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தனது முதல் வாக்கை செலுத்துவது என விடாப்பிடியாக இருந்து வந்துள்ளார். தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டப்போது கூட மகேந்திரன் வாக்கை செலுத்தவில்லை.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் எதிர்பார்த்த ஆட்சியை அளிப்பதாக கூறி தன்னை திமுகவில் மகேந்திரன் இணைத்துக்கொண்டார். 30 ஆண்டுகளாக வாக்கு செலுத்தாமல் இருந்த மகேந்திரன் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 22வது வார்டு ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்று தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.