இலங்கையில் அதிபர் கோத்தபயாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீப்புகைக் குண்டுகளை வீசினர்.
பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.
நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது.
இந்த நிலையில் அதிபர் கோத்தபயாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களைக் கலைக்கும் விதமாக காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிவருகின்றனர். இதில் ஏராளமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.