அமலாக்கத்துறையைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட ஆயிரம் பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை மத்திய அரசின் அமலாக்கத்துறை, பழிவாங்கும் நோக்கத்துடன் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதைக் கண்டித்து நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் அமலாக்கத்துறையைக் கண்டித்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அஜாக்கிரதையாக தீயை கையாளுதல், தடை செய்யப்பட்ட இடத்தில் கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.