Site icon ழகரம்

‘சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது’ – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்து தற்போதுள்ள நிலையில் எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. முன்னதாக கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது சொத்து வரி உயர்வு குறித்து எழுப்பப்பட்ட முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின்: “சொத்து வரி உயர்வு குறித்து அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்பு தேர்தல் நடைபெறவில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தேக்க நிலையை அடைந்திருந்தது. மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையால், மக்களின் அன்றாடப் பணிகளை நிறைவேற்றுவதில் கூட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அதனை அரசு சோதனையாக சந்தித்துக் கொண்டிருந்தது.

ஆனால், தற்போது அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்பில் பொறுபேற்றவர்கள் அரசிடம் என்ன எதிர்பார்ப்பார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் ஆற்றவேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கான நிதியை எதிர்பார்ப்பார்கள்.

எனவே இந்த நிலையில்தான் மக்களை பாதிக்காத வகையில், குறிப்பாக ஏழை, எளிய மக்களை, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், தற்போது, நடைமுறைப்படுத்தப்படவுள்ள சொத்துவரி சீராய்வில், கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறு பிரித்து, வரி உயர்வு செய்யப்படக்கூடிய திட்டம் இதில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் நகர்புறத்தில் மொத்தமுள்ள குடியிருப்புகளை, பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 83 விழுக்காடு மக்களை இந்த வரி விதிப்பு பாதிக்காது என்பதுதான் உண்மை. எனவேதான் பத்திரிகைகளும் ஊடகங்களும்கூட இந்த அரசின் முயற்சியை பாராட்டிக் கொண்டு இருக்கிறது. அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கக்கூடிய கட்டாயம், அதற்கு நிதி ஆதாரம் அவசியம் தேவை.

இப்போதுள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்து எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்று நேற்றைய தமிழ் நாளிதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். எனவே எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்திட வேண்டாம்” என்று அவர் கூறினார்.

Exit mobile version