செய்திகள்இந்தியா

காங்கிரஸில் என்ன பதவி எதிர்பார்க்கிறார் பிரசாந்த் கிஷோர்? – டிஆர்எஸ் ஒப்பந்தத்தால் மேலும் சிக்கல்

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது தெலங்கானா தேர்தலுக்கு டிஆர்ஸ் கட்சியுடன் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை.

அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதுமட்டுமின்றி பாஜகவை வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் வெல்லும் திறன் காங்கிரஸுக்கு இல்லை எனவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்கு நேரு குடும்பத்தினரே இருக்க வேண்டிய தேவையில்லை எனவும் காட்டமாக விமர்சித்து வந்தார்.

இதுமட்டுமின்றி காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் அணியை கட்டியமைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து உயர்மட்ட காங்கிரஸ் கூட்டம் நடந்தது. பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, திக்விஜய சிங், மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மாக்கன், கே.சி.வேணுகோபால் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

என்ன பதவி?

இதில் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பணியை பிரசாத் கிஷோர் கவனிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகின.

பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பது குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் கட்சியில் வியூகம் வகுக்கும் செயலை கவனித்துக் கொள்வதாகவும், இதற்காக பொதுச்செயலாளர் (வியூகம்) என்ற பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் கட்சியில் புதிதாக சேரும் ஒரு நபருக்கு இத்தகைய பதவியை கொடுக்க கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திக் விஜய் சிங், கே.சி.வேணுகோபால் உட்பட பல தலைவர்களும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதை விரும்பவில்லை. அவர் பல கட்சிகளுக்கும் ஆலோசகராக இருந்துக் கொண்டு காங்கிரஸில் எப்படி பொறுப்பு வகிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் இறுதி முடிவெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களுடன் இந்த விவகாரம் தொடர்பாக சோனியா காந்தி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு டிஆர்எஸ் கட்சிக்கான வெற்றி வியூகங்களை பிரஷாந்த் கிஷோர் நேரடியாக வழங்க மாட்டார் என்றும், அவரது ஐபேக் நிறுவனம்தான் வழங்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் சேரும் பிரசாந்த் கிஷோர் தெலங்கானா ராஷ்ட்ர சமதிக்கு ஆலோசனை வழங்குவதை அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதிரிக்கு நண்பனாக இருக்கக்கூடியவரை ஒருபோதும் நம்பக்கூடாது என்று பிரசாந்த் கிஷோரை தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதில் தற்போது மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button