செய்திகள்இந்தியா

‘‘2 நாட்கள் மின்வெட்டை நிறுத்துங்கள்’’ – பொது வேலைநிறுத்தத்தால் மின் பாதிப்பை தடுக்க ஒன்றிய அரசு உத்தரவு

தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பொது வேலைநிறுத்தத்தின் போது மின்விநியோகத்தில் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஒன்றிய மின்சார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளனர். மின்துறை ஊழியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால் மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய அளவில் மார்ச் 28 முதல் 30 வரை ஒரு பிரிவுத் தொழிலாளர்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் போது, மின்தொகுப்பின் நம்பகத்தன்மையைப் பராமரிப்பதுடன், அதனை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய மின்சார ஆணையம், தேசிய மற்றும் மண்டல மின் அனுப்பு மையங்கள் ஆகியவற்றுக்கு ஒன்றிய மின்சார அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

மின் தொகுப்பு 24 மணி நேரமும் இயங்குவதற்கு ஏற்றவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. 28 மற்றும் 29 தேதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக ஏற்கனவே மின்வெட்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தால், அதனை கூடியமட்டும் ஒத்திவைக்குமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.

எந்தவித நெருக்கடி நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு போதிய பணியாளர்களைத் தயாராக வைத்திருக்குமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவமனைகள், பாதுகாப்பு, ரயில்வே போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மின் விநியோகம் உறுதிசெய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாநில/மண்டலக் கட்டுப்பாட்டு மையங்களின் அதிகாரிகள் விழிப்புடனும், உயர் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எந்தவிதச் சிக்கலையும் கையாளுமளவிற்கு தகவல்களைப் பரப்பும் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button