“ஓபிஎஸ் தூண்டுதலின் பெயரில் கோவை செல்வராஜ் பெட்ரோல் பங்க் குத்தகை குறித்து பேசியிருக்கிறார். எங்களுடைய நற்பெயரை கெடுப்பதற்காக இதுபோல கூறுவது, ஓபிஎஸ் உடன் நீண்டகாலமாக அரசியல் பயணம் மேற்கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு வேதனையாக இருக்கிறது. ஏன் அவருடன் பயணித்தோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது” என்று இபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” எனது மகன் பெயரில் 99 ஆண்டுகளுக்கு பெட்ரோல் பங்க்கை லீசுக்கு வாங்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியிருக்கிறார். ஆனால் அந்த பெட்ரோல் பங்க் ஒரு கூட்டுறவு இணையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வகைகளில் அரசுக்கு வருவாய் வரவேண்டும் என்பதற்காக 2017-ம் ஆண்டு இணையத்தில் ஒரு தீர்மானம் போடப்பட்டு, இணையத்தின் வாயிலாக உத்தரவு பிறப்பித்து இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. அதனை தற்போது அமைச்சராக இருக்கக்கூடிய காந்தி திறந்து வைத்துள்ளார்.
2020-ம் ஆண்டில் ஒப்பந்தம் ஆரம்பித்து 2040-ல் நிறைவடைகிறது. 20 ஆண்டுகள் ஒப்பந்தம். இதுகூட தெரியாமல், கோவை செல்வராஜ் பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய எங்கள்மீது நற்பெயரை கெடுப்பதற்காக, பழி சுமத்தியிருக்கிறார்.
கோவை செல்வராாஜ், ஓபிஎஸ்-ன் தூண்டுதலின்பேரில் இந்த கருத்தை சொல்லியிருக்கிறார். இபிஎஸ் உடன் நான்கரை ஆண்டு காலம் துணை முதல்வராக பயணித்தீர்கள், அப்போது இந்த சிந்தனை வரவில்லையா?
கட்சித் தொண்டர்களும் பொது மக்களும் வெறுத்து ஒதுக்குகின்ற இந்த சூழ்நிலையில், எங்களுடைய நற்பெயரை கெடுப்பதற்காக இதுபோல கூறுவது, நீண்டகாலமாக உங்களோடு அரசியல் பயணம் மேற்கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு வேதனையாக இருக்கிறது. ஏன் உங்களுடன் பயணித்தோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.