நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதில், சென்னை ராயபுரம் 49வது வார்டில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி ஒருவரை அதிமுகவினர் மடக்கி பிடித்தனர்.
பிடிபட்ட நபரின் கையை கட்டி அந்த நபரிடம் சட்டையை கழட்டும்படி கடுமையாக ஜெயக்குமார் கூறினார்.
இதை தொடர்ந்து, அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு அவரது கைகளும் கட்டப்பட்டன. பின்னர், சட்டை இல்லாமல், அவர் அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ‘வேற வார்டை சேர்ந்த உனக்கு இங்கு என்ன வேலை என்றும், திமுகவைச் சேர்ந்த நீ எத்தனை கள்ள வாக்குகளை போட்டாய்’ என்றும் அவரிடம் ஜெயக்குமார் கேள்வி கேட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும், ராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு கால் மண்டபம் சாலை ஜி.ஏ ரோடு சந்திப்பில் சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.