Site icon ழகரம்

சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து வந்த போலந்து நாட்டை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் கைது

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கோடியக்கரைக்கு ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டுக்காரரை போலீஸார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மூணாங்காடு பகுதியில் நேற்று முன்தினம் காலை சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கியது.

இதுகுறித்து மீனவர்கள் கொடுத்த தகவலின்பேரில், வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸார், தஞ்சை டிஐஜி கயல்விழி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் உளவுத் துறை போலீஸார் விரைந்து வந்து படகை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, மீனவ கிராம பஞ்சாயத்தாரை போலீஸார் அழைத்து வெளிநபர்கள் வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கேட்டு கொண்டனர். இந்நிலையில், ஆறுகாட்டுத்துறையில் சந்தேகப்படும்படியான ஒருநபர் நடந்து செல்வதாக போலீஸாருக்கு மீனவ கிராம பஞ்சாயத்தார் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில், போலீஸார் ஆறுகாட்டுத்துறைக்கு விரைந்து சென்று, அந்த நபரை கைது செய்து வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்

விசாரணையில், போலந்து நாட்டைச் சேர்ந்த வாத்திஸ்வாப்(40) கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையை சுற்றிப் பார்க்க வந்துள்ளார். அப்போது, இலங்கையில் குடிபோதையில் ஒரு அடிதடி வழக்கில் சிக்கியாதால் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக கொழும்பிலேயே அவர் சுற்றித் திரிந்துள்ளார்.

பின்னர், சொந்த நாட்டுக்கு செல்ல, தமிழகம் வழியாக டெல்லிக்குச் சென்று அங்குள்ள போலந்து நாட்டு தூதரகம் மூலம் தனது நாட்டுக்கு சென்று விடலாம் என இலங்கையில் உள்ளவர்கள் கூறிய யோசனையின்பேரில், ரூ.1 லட்சம் பணம் கொடுத்து ரப்பர் படகை வாங்கி, அதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கோடியக்கரைக்கு ஜூலை 23-ம் தேதி அதிகாலை வந்து சேர்ந்துள்ளார்.

படகை மூணாங்காட்டிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து 3 கி.மீ தொலைவுள்ள ஆறுகாட்டுத்துறைக்கு நடந்தே வந்து அங்கு உள்ள கருவைத் தோப்பில் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட போலந்து நாட்டுக்காரரை உளவுத் துறை போலீஸார், கியூ பிராஞ்ச் போலீஸார், மத்திய உளவுத் துறையினர் கூட்டாக சேர்ந்து விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ரூ.1 லட்சம் பணம் கொடுத்து ரப்பர் படகை வாங்கி, அதில் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து கோடியக்கரைக்கு ஜூலை 23 அதிகாலை வந்து சேர்ந்துள்ளார்

Exit mobile version