செய்திகள்இந்தியா

கர்நாடக மாநில மாணவர் நவீனின் உடலை மீட்க பிரதமர் மோடி உத்தரவு

கர்நாடகாவின் ஹாவேரியை சேர்ந்த நவீன் (22) உக்ரைனின் கார்கிவ் நகரில் மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 1-ம் தேதி கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், உயிரிழந்த மாணவர் நவீன் குறித்து பிரதமர் விசாரித்தார். எப்படியாவது அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வெளியுறவு துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக திரண்டுள்ளன. ரஷ்யா வுக்கு ஆதரவாக சீனா, பெலாரஸ், ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கியுள்ளன. உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.

இந்த சூழலில் இராக்கின் இர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து 12 ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தை தாக்கின. ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவை பின்பற்றி சீனாவும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக தைவான் உள்ளிட்ட நாடுகளை ஆக்கிரமிக்க சீன ராணுவம் முயற்சி செய்யக்கூடும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. லடாக், அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருவதால் இரு நாடு களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

எல்லை தாண்டிய தீவிரவாத பிரச்சினையால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை கடந்த 9-ம் தேதி தவறுதலாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் பாய்ந்தது. இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.

இந்த பின்னணியில் பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழுவின் அவசர கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உக்ரைன் போரால் எழுந்துள்ள பதற்றம், இந்தியாவின் எல்லைப் பகுதிகளின் நிலவரம், கடல், வான் பாதுகாப்பு தயார் நிலை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் இருந்து 20,000 இந்தியர்கள் மீட்கப்பட்டது குறித்து பிரதமரிடம் வெளியுறவு அமைச்சர், செயலாளர் விவரித்தனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறையில் தன்னிறைவை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். ராணுவ தளவாடங்ககளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல் “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு வலுப் படுத்தப்படும். பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button