குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ள நிலையில் தன் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை தான் எப்போதும் கடந்ததில்லை என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. “ஒருபுறம் என் இதயம் வலியில் கனக்கிறது. இன்னொரு புறம் கடமையின் பாதை என்னை அழைக்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் கேவடியா பகுதியில் அமைந்துள்ள சர்தார் வல்லபபாய் படேலின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல், நாட்டின் முதல் துணை பிரதமர், முதல் உள்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். நாடு சுதந்திரம் அடைந்தபோது பல்வேறு பகுதிகளாக பிரிந்திருந்த இந்தியாவை ஒன்றிணைத்தவர். அவரது சொந்த மாநிலமான குஜராத்தில், நர்மதை நதியில் சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.2 கி.மீ. தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் ரூ.3,000 கோடியில் 182 மீட்டர் உயரத்தில் அவருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒற்றுமையின் சிலை என்று பெயர்சூட்டப்பட்டிருக்கிறது. இது உலகின் மிக உயரமான சிலையாகும். இந்நிலையில் இன்று அவரின் 147வது பிறந்தநாளை ஒட்டி தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி அங்கு மரியாதை செலுத்திய பிரதமர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், “என் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை தான் எப்போதும் கடந்ததில்லை. ஒருபுறம் என் இதயம் வலியில் கனக்கிறது. இன்னொரு புறம் கடமையின் பாதை என்னை அழைக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று விபத்து நடந்தது முதல் குஜராத் அரசு மீட்பு, நிவாரணப் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது. மத்திய அரசும் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அதிக அக்கறையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு, நிவாரனப் பணிகளில் சிறு தொய்வும் இருக்காது என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைத்து மாநில அரசு அமைத்துள்ளது. நான் இங்கு ஏக்தா நகரில் நின்று கொண்டிருந்தாலும் கூட என் மனம் முழுவதும் மோர்பி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இருக்கிறது” என்று கூறினார்.
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சுற்றுலாத் தலமான இங்கு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்ததில், அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இன்று (அக் 31) காலை 8.30 மணி நிலவரப்படி 132 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குஜராத் தகவல் தொடர்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்புப் படை ஆகியவை தொடர்ந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மோர்பி சட்டமன்ற உறுப்பினர் ப்ரிஜேஷ் மெஹ்ரா பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.