தமிழகத்தில் 10 ஆயிரம் குறுங்காடுகள் உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார்.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘மலை மற்றும் கடலோரப் பகுதி சூழலியலின் நீடித்த நிலையான வளர்ச்சி’ என்ற தலைப்பில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச மாநாடு தொடக்க விழா சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது.
இதில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இணைய வழியில் பங்கேற்றுப் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநாட்டைத் தொடங்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பூம்புகாாரில் அமைந்துள்ள ‘ஒவ்வொரு குழந்தையும்ஒரு விஞ்ஞானி’ மையத்தை இணையவழியில் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்உலகெங்கும் உள்ள விவசாயி களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். எங்கெல்லாம் வேளாண்மைக்குப் பாதிப்பு ஏற்படுகிறதோ, அவற்றை எதிர்கொள்வதற்கான நுட்பங்களைத் தந்தவர் சுவாமிநாதன்.
காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் சராசரி வெப்பம் 1.3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 0.2 டிகிரி உயர வாய்ப்புள்ளது. அப்போது பாதிப்பு கடுமையாக இருக்கும்.
எனவே, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுத்து, அதிக மரங்கள் வளர்க்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தின் வனப் பரப்பு22.71 சதவீதம். அடுத்த 10 ஆண்டுகளில் இதை 33 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
சுற்றுச்சூழல் துறை சார்பில், பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 10 ஆயிரம் குறுங்காடுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் 52 ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றின் மூலம் தலா 1,000 உள்நாட்டுமரங்களைக் கொண்ட குறுங்காடு கள் உருவாக்கப்படும்.
தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள காலநிலை மாற்ற இயக்கத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட உள்ளது. இதில், 500 கி.மீ. நீள கடலோரப் பகுதியில், கடல் அரிப்பைத் தடுக்கபனை மரங்களை நடுதல், சதுப்புநிலக் காடுகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவர் மதுரா சுவாமிநாதன், செயல் இயக்குநர் ஜி.என்.ஹரிஹரன், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஏ.கே.சிங், அறக்கட்டளை அறங்காவலர்கள் நாராயணன் ஜி.ஹெக்டே, ஜிஜூ பி.அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.