இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், அடையாறு ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை அமைப்பதற்கான மண் ஆய்வுப் பணி தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது.
சென்னை மாநகரில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63 ஆயிரத்து 200 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பணிகள் ஒதுக்கீடு பெற்ற கட்டுமான நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன்படி, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கான பணிகளில் பசுமை வழிச்சாலையில் உள்ள பூங்காவில் சுரங்க ரயில் நிலையம் அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது. இந்தப் பணி முடிவடைந்ததும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் கூவத்தின் கீழேசுரங்க ரயில் நிலையம் அமைத்தது போல, அடையாறு ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, மிதவைப் படகுகளில் இயந்திரங்களை பொருத்தி ஆற்றின் நடுவே மண் ஆய்வு செய்யும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, ஒத்திகை நேற்று தொடங்கியது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
அடையாறு ஆற்றில் மண் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்காக 2 மிதவைப் படகுகள் வடிவமைக்கப்பட்டு அவற்றில் இயந்திரங்களைப் பொருத்தி அடையாறு ஆற்றில் மண் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இரட்டை சுரங்கப்பாதை
ஆற்றின் குறுக்கே துளையிடும் இயந்திரத்தை எடுத்துச் சென்று ஆற்றுப்படுக்கையை துளையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்படும். ஒவ்வொரு 25 மீட்டர் முதல் 50 மீட்டர் தொலைவில், 12 மீட்டர் முதல் 18 மீட்டர் ஆழத்தில் மண் பரிசோதனை செய்யப்படும். மாதிரிகள் சேகரிப்பு மற்றும் ஆய்வு 3 அல்லது 4 மாதங்களில் முடிவடையும்
கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அடையாறு சந்திப்பு மெட்ரோ ரயில்நிலையம் இடையே 29 மீட்டர்ஆழத்தில் ஆற்றின் கீழே 400மீட்டர் நீளத்துக்கு இரட்டைசுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.
சுரங்கப்பாதை பணி செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கப்படலாம். அதற்கு முன்னதாக, மண் பரிசோதனையை முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது. 2-ம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் 3வழித்தடங்களில் (118.9 கி.மீ.) பணிகளை 2026-ல் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.