அரியலூர் மாவட்டம் கீழமிக்கேல்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் மட்டும் இந்தியில் பேசவோ, மற்றவர்கள் பேசுவதை புரிந்துகொள்ளவோ முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்தி எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டங்களை நடத்தும் திராவிட கட்சிகள் தங்களைச் சார்ந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி பாடத்தைக் கற்றுக் கொடுப்பதுடன், தாங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் இந்தியை கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால், ஏழை, எளிய மக்களை இந்தி படிக்க விடாமல் தடுக்கின்றனர். எங்கள் கட்சி உறுப்பினர்களின் திருமணத்துக்கு சீர்வரிசையாக ஒரு பவுன் தங்கம், ரூ.20,000 ரொக்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டம் இதுவரை எந்த கட்சியும் செய்யாத சாதனை என்றார்். அப்போது, கட்சி பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் சத்தியநாதன் உடனிருந்தனர்.