திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே காட்டுப்பள்ளியில் செயல்படும் தனியார் கப்பல் கட்டும் தளம், துறைமுகம் உள்ளிட்ட நிறுவனங்களில் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த 1,750 மீனவ இளைஞர்களுக்கு பணி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதில், முதற்கட்டமாக 250 பேருக்கு பணி வழங்கப்பட்டு, அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். மீதமுள்ள 1,500 பேருக்கு பணி வழங்க வேண்டும். ஏற்கெனவே பணியில் உள்ள 250 பேரின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த 3 ஊராட்சிக்கு உட்பட்ட 16 மீனவ கிராமங்களை சேர்ந்தோர் தனியார் கப்பல் கட்டும் தளம், துறைமுகம் உள்ளிட்டவற்றின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்கள் 200 பேரை காட்டூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்த பழவேற்காடு பகுதி மீனவர்கள் சுமார் 300 பேர், பழவேற்காடு மீனவர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில், கடல் மார்க்கமாக கருப்புக் கொடி கட்டிய 70-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்டனர்.
இதனால், துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியே வர முடியாமலும், வெளியில் இருந்து உள்ளே போக முடியாமலும் இருந்தன. பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், கடலோர காவல் படையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. காலை 11.30 மணிமுதல், மதியம் 3.20 வரை சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நீடித்தது. அதன் பிறகு மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.