Site icon ழகரம்

எம்ஜிஆர் விருப்பப்படி கட்சி தொண்டர்கள் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்: அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கருத்து

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் விருப்பப்படி கட்சியின் பொது உறுப்பினர்கள் (தொண்டர்கள்) மூலம் கட்சித் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக இன்று சந்திக்கும் பிரச்சினைகள் சாதி அடிப்படையிலானது என்பதுதான் வேதனையாக உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் அது கட்சிக்கும், தமிழகத்துக்கும் நல்லதல்ல. கட்சித் தலைவர்களை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்பியவர் எம்ஜிஆர் அந்த வகையில் தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ஒற்றைத் தலைமையை ஏற்கட்டும்.

அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை வேண்டும் என எந்தத் தொண்டனும் கேட்கவில்லை. நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அவர் வகித்த பதவிக்கு யாரும் வரக்கூடாது என்று கூறிதானே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமையை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கொண்டு வந்தார்கள். அதை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டோம். இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கூறுவது ஏன்?

கட்சித் தலைமைக்கு ஒரு பிரச்சினை வரும்போது 80 சதவீத ஆதரவுள்ள பொது உறுப்பினர்கள்தான் தலைமைக்கு வர வேண்டும் என கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் உயிலில் எழுதி வைத்துள்ளார்.

தலைவரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என எம்ஜிஆர் எழுதிய உயில் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமனிடம் உள்ளது. அதன்படி, தலைமை பொறுப்புக்கு யார் வர வேண்டும் என்பதை தொண்டர்களே முடிவு செய்யட்டும். யார் வேண்டுமானாலும் தலைமை பொறுப்புக்கு போட்டியிடட்டும்.

கடந்த பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த உயர் நீதிமன்றம் வழிகாட்டியும் கட்சித் தலைமையை அங்கீகரிப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்களையும் ரத்து செய்து விட்டார்கள். இப்போது கட்சியில் யாருக்கும் எந்த பொறுப்பும் இல்லை, அங்கீகாரமும் இல்லை என்றார்.

Exit mobile version