ராம்சர் சதுப்புநில பட்டியலில் பள்ளிக்கரணையை முழுமையாக காக்க நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான ராம்சர் உடன்பாட்டின்படி சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை உலக முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஈர நில பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும், வரவேற்கத்தக்க நடவடிக்கையும் ஆகும்.
ஈர நிலங்கள் எனப்படுபவை உலகிற்கு இயற்கை அளித்தக் கொடையாகும். அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் 1971-ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் ஐ.நா. அமைப்பின் ஏற்பாட்டில் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு தான் ராம்சர் உடன்பாடு ஆகும்.
அதனடிப்படையில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியலில் 171 நாடுகளைச் சேர்ந்த 2,437 ஈரநிலப் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 49 இடங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாகும்.
ராம்சர் தளங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து மொத்தம் 5 இடங்கள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் மிசோரம் மாநிலத்தின் பாலா ஈரநிலம், மத்தியப் பிரதேசத்தின் சக்யாசாகர் ஏரி தவிர மீதமுள்ள 3 இடங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. தமிழகத்திலிருந்து இதுவரை கோடியக்கரை மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், இப்போது மேலும் 3 இடங்கள் சேர்க்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெருமை. இதற்காக கடந்த 11 ஆண்டுகளாக தமிழக அரசும், வனத்துறையும் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராம்சர் தளங்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ராம்சர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் தான். பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சில மாதங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும்; ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2003-ஆம் ஆண்டு பள்ளிக்கரணை முதல் சோழிங்கநல்லூர் வரை மிதிவண்டி பரப்புரை பயணம் மேற்கொண்டேன். அதன்பிறகும் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தேன். எனது 20 ஆண்டு கால கோரிக்கை இப்போது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமாக இருந்தவன் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.
ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது என்பதாலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை மேம்பட்டு விடாது. அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம் தான் அவற்றின் மேம்பாட்டை சாத்தியமாக்க முடியும். குறிப்பாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி காணாமல் போவதற்கு முன் அதை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1725 ஏக்கராக சுருங்கிவிட்டது.
இப்போதும் கூட பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற ஈர நிலம் என்ற அளவில் சிறப்பாக இல்லை. மாறாக, குப்பை மேடாகவும், கழிவு நீர் தொட்டியாகவும் தான் பயன்படுத்தப் பட்டு வருகிறது. கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவையும் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஈர நிலங்களை முறையாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமல், அவற்றுக்கு எத்தகைய தகுதி பெற்றுத் தரப்பட்டாலும் கூட அதனால் எந்த பயனும் ஏற்படாது. எனவே, ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தில் ஈர நிலங்கள் இயக்கம் என்ற அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பால் ஈர நிலங்களின் பாதுகாப்புக்கான செயல்களை மேற்கொள்ள முடியும் என்ற போதிலும், ஈர நிலங்களை சீரழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கிடையாது. ஆகவே, ஈர நிலங்கள் இயக்கத்தை கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஆணையமாக மாற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களின் எல்லைகளை வகுத்து, இனியும் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
ராம்சார் தளங்கள் பட்டியலில் சேர்ப்பதற்காக தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பழவேற்காடு ஏரி உள்ளிட்ட மேலும் 10 இடங்களையும் அப்பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்.” இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.