Site icon ழகரம்

Hindu Tamil முகப்பு தமிழகம் ஆர்.பாலசரவணக்குமார் ஆர்.பாலசரவணக்குமார் Published : 01 Aug 2022 02:04 PM Last Updated : 01 Aug 2022 02:04 PM நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால்… – ஐகோர்ட் எச்சரிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை வேளச்சேரி, தரமணி, உள்ளிட்ட இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை சட்டப்படி அகற்ற வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இதேபோல நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்ட போதும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். கடைசி உத்தரவை அமல்படுத்தும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது எனவும் அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 10 நாட்களுக்கு தள்ளிவைத்தனர்.

Exit mobile version