“அதிமுக சட்டமன்ற பதவிகள் குறித்து மனுக்கள் வந்தால் அவற்றை நிராகாிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த கடிதம் பரிசீலனையில் உள்ளது” என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் நேற்று முன்தினம் அவரது உதவியாளர் மூலம் கிடைத்தது. வேறு யாரும் எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை. இக்கடிதம் பரிசீலனையில் உள்ளது. கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்தக் கடிதம் தொடர்பாக சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முன்னதாக பேரவைத் தலைவருக்கு ஓபிஎஸ் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில்,” சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர், சட்டமன்ற கொறடா உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அதிமுகவினர் பொறுப்பில் உள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை. பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி அதிமுக சார்பாக சட்டமன்ற பதவிகள் குறித்து மனுக்கள் வந்தால் அதை நிராகரிக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.