முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் வரும் மார்ச் 21-ல் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்கள், சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 16-ம் தேதி ஆலோசனை நடத்தியது.
அதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி நேற்று அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் பாபு மனோகர், அருள்செல்வம், ராமகிருஷ்ணன், சுந்தர் மற்றும் காமேஷ் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்பும், பின்னும் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விளக்கம் அளித்திருந்தனர்.