வைகை ஆற்றில் வழியோரக் கிராமங்கள், நகரங்கள் என கடைக் கோடி வரை கழிவு நீரைக் கலக்கச் செய்வதால் ஆறு மாசுபடுகிறது. ரூ.2.50 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தும் மதுரை ஆழ்வார்புரத்தில் பகிரங்கமாக கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது.
தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வைகை ஆற்றில் அதன் கடைக்கோடிப் பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் வரை ஒரு காலத்தில் ஆற்று மணல் நிறைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில் ஆற்றில் இருந்த மணல் முழுமையாக கபளீகரம் செய்யப்பட்டது. ஆற்று வழித்தடங் களில் ஆற்று மணல் இல்லாததால் வைகை கரையோரப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோனது. மேலும், நீரின் சுவையும் குன்றி உவர் நீராக மாறிவிட்டது.
அணையில் நீர் திறந்தாலும் ராம நாதபுரம் மாவட்டத்தை தண்ணீர் எட்டிப்பார்ப்பது கடினம்தான் அதனால், வைகை ஆற்றங்கரையில் வழிநெடுக இருந்த தென்னந்தோப்புகள் இன்று அழிந்துவிட்டன. விளைநிலங்களும் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன.
பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் எஞ்சியுள்ள வைகை ஆற்றையும், அதன் வளத்தையும் பாதுகாக்க பொதுப்பணித் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வைகை ஆற்றில் கழிவு நீர் கலந்து நிலத்தடி நீரும் மாசு அடைந்து வருகிறது.
மதுரை மாவட்ட வைகை ஆற்றின் இரு கரையோர கிராமங்கள் அனைத்துமே தங்கள் கழிவுநீரை கால்வாய் கட்டி ஆற்றுக்குள்தான் பாயவிடுகின்றன. இந்த அத்துமீறல் அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கிறது. ஆனால், தடுக்க வேண் டிய பொதுப்பணித்துறையினர் கண்டு கொள்வதில்லை.
மதுரை மாநகரில் ஆழ்வார்புரம், செல்லூர், அண்ணாநகர், ஆரப் பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த காலத்தில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலந்தது. அதனால், வைகை ஆறு முற்றிலும் மாசடைந்து துர்நாற்றம் வீசியது. வைகை கரையோர மாநகராட்சி வார்டுகளில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் ஆற்றில் கலந்தது தெரியவந்தது. அதனால், கரையோர வார்டுகளில் பாதாள சாக்கடை அமைத்து செல்லூர் பந்தல்குடி கால்வாயில் ரூ.2.50 கோடியில் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகமான கழிவு நீரை சுத்திகரிக்க முடியவில்லை. அதனால், ஆழ்வார்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் தற்போதும் கடந்த காலத்தைப் போலவே கழிவு நீர் வைகை ஆற்றில் பகிரங்கமாக திறந்து விடப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி களிடம் கேட்டபோது, “பந்தல்குடி கால்வாயில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் போதிய அளவு கழிவு நீரைச் சுத்திகரிக்க முடியவில்லை. அதனால், செல்லூர் முதல் முந்திரி தோப்பு வரை கழிவு நீர் குழாய் அமைத்து இங்கிருந்து பம்பிங் செய்து சக்கிமங்கலத்துக்குக் கொண்டு சென்று சுத்திகரிப்பதற்கான பணி நடக்கிறது. இப்பணி இன்னும் 2 வாரத்தில் முடிந்துவிடும். அதன்பிறகு வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்காது’’ என்றனர்.