இந்தியா முழுவதும் இயங்கும் ரயில்களில் 120 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் ஒன்றில்கூட கழிப்பறை வசதி இல்லை என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக பெண்களும் ரயில் இன்ஜின்களை இயக்கி வருகின்றனர். ஆனால், இன்ஜினில் கழிப்பறை வசதி இல்லாததால், ரயில் ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக ரயில்வே வாரியத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ரயில் இன்ஜினில் உள்ள கழிப்பறை வசதிகள் தொடர்பாக, சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தில்,ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த இந்திய ரயில்வே, நாடு முழுவதும் 120 ‘டபுள்யு.ஏ.ஜி.’ மின்சாரஇன்ஜின்களில் மட்டும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 9 ரயில் இன்ஜின்களில் கழிப்பறை வசதிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
2019 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ரயில் இன்ஜின்களில் கழிப்பறை அமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. ஆனால், இதுவரை 120 இன்ஜின்களில் மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வேயில் 15 ரயில் இன்ஜின்களிலும், மேற்கு மத்திய ரயில்வேயில் 16, கிழக்கு ரயில்வேயில் ஒன்று, தென் கிழக்கு ரயில்வேயில் 5, வடகிழக்கு எல்லை ரயில்வேயில் ஒரு ரயில் இன்ஜினிலும் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் 26, தென் மத்திய ரயில்வேயில் 27, கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 28, தென் மேற்கு ரயில்வேயில் ஒரு இன்ஜின் உள்பட மொத்தம் 120 ரயில் இன்ஜின்களில் மட்டும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 16 ரயில்வே மண்டலங்களில், 9 மண்டலங்களில் உள்ள சொற்ப எண்ணிக்கையிலான மின்சார இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தெற்கு ரயில்வேயில் இயங்கும் மின்சார இன்ஜின்களில் ஒன்றில்கூட கழிப்பறை வசதி செய்யப்படவில்லை.
பரிதவிக்கும் ஓட்டுநர்கள்
இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறும்போது, “தேஜாஸ் போன்ற அதிவிரைவு ரயில்கள் 300 கி.மீ.க்கும் மேல் நிற்காமல் செல்லும் தற்போதைய சூழலிலும், கழிப்பறை வசதியின்றி ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தெற்கு ரயில்வே உடனடியாக அனைத்து ரயில் இன்ஜின்களிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்றார்.
அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்க இணைப் பொதுச் செயலர் பார்த்தசாரதி கூறும்போது, “இன்ஜின்களில் கழிப்பறை இல்லாததால், சிறுநீர் கழிக்க முடியாமல் தவிக்கிறோம்.
இதனால், ரயில் ஓட்டும்போது தண்ணீர்கூட குடிப்பதில்லை. தற்போது பெண் ரயில் ஓட்டுநர்களும் அதிகம் உள்ளனர். எனவே, உடனடியாக ரயில் இன்ஜின்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்றார்.