பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக தனக்கு பிரதமர் பதவி மீது விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீப காலமாகவே இந்தக் கூட்டணி புகைந்துவந்து நிலையில், கூட்டணியை முறிப்பதாக அறிவித்தார் நிதிஷ் குமார். அத்துடன் நில்லாமல், தன் பழைய கூட்டாளியான ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்தார். லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார், மீண்டும் முதல்வரானார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
பதவியேற்புக்குப் பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த நிதிஷ் குமார், “2014-ல் வென்றவர்கள் 2024 தேர்தலிலும் வெற்றி பெறுவார்களா என்று பார்ப்போம். எனக்கு பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணமில்லை. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் அதே கருத்தை அவர் முன்வைத்துள்ளார். நிருபர் ஒருவர், “2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு கைகளைக் கூப்பிக் கொண்டு பதிலளித்த நிதிஷ் குமார், “அப்படி ஓர் எண்ணம் என் மனதில் இல்லை. மக்கள் சொன்னாலும் சரி, என்னுடன் நெருக்கமானவர்கள் சொன்னாலும் சரி எனக்கு அந்த எண்ணம் இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அந்த ஒற்றுமையை ஏற்படுத்த நான் என்னால் ஆன பணிகளைச் செய்வேன். நாங்கள் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவோம். நாட்டில் நல்லதொரு சமூகச் சூழல் உருவாக வேண்டும்” என்றார்.
பிஹாரில் புதிதாக ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 24-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. நிதிஷ் குமார் மீண்டும் மீண்டும் பிரதமர் வேட்பாளராகும் விருப்பமில்லை என்று கூறினாலும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜேடியு நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பிஹாரின் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில், லாலு மகன் தேஜஸ்வி பிரசாத் முதல்வர் வேட்பாளர் என முடிவாகி உள்ளது. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை முன்னிறுத்தவும் காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட சிலருடன் பேச்சு நடைபெற்றுள்ளது. காங்கிரஸில் இருந்து யாரையும் ஏற்காத எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவிக்கு நிதிஷை முன்னிறுத்துவதில் ஆட்சேபனை இருக்காது. எனவே, 2024 மக்களவையுடன் சேர்த்து பிஹார் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது’’ என்று கூறியுள்ளனர்.