ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் தடையை தகர்க்க அந்நாட்டு அதிபர் புதின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். நட்பற்ற நாடுகள் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு வாங்க ரஷ்ய ரூபிள்களில் இனி பணம் செலுத்த வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக அளவில் ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். அதன்படி ரஷ்யாவுடன் நட்பற்ற நாடுகள், கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு விற்பனைக்கு டாலருக்கு பதில் இனிமேல் ரஷ்யாவின் நாணயமான ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற அதிபர் புதினின் அறிவித்துள்ளார்.
புதின் அறிவிப்பில் ‘‘நட்பற்ற நாடுகளுக்கு எங்கள் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை ரஷ்ய ரூபிள்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த நான் முடிவு செய்துள்ளேன். இந்த மாற்றங்களை ஒரு வாரத்திற்குள் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
ரஷ்ய அரசும் மத்திய வங்கியும் இந்த நடவடிக்கைகளை ரஷ்ய நாணயத்திற்கு எவ்வாறு நகர்த்துவது என்பது குறித்த ஒரு தீர்வைக் கொண்டு வரும். இதற்கு ஒரு வாரம் அவகாசம் இருக்கிறது. ஏற்கெனவே செய்து கொண்ட எரிவாயு ஒப்பந்தங்களில் இதுதொடர்பான மாற்றங்களைச் செய்ய உத்தரவிடப்படும்’’ என அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவுடன் நட்பற்ற நாடுகளின் பட்டியலையும் அறிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பிரிட்டன், ஜப்பான், கனடா, நார்வே, சிங்கப்பூர், தென்கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் உக்ரைன் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த நாடுகளில் பெரும்பாலானவை தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு ரஷ்யாவையே பெரிதும் நம்பியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெருமளவு தங்கள் எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவையே நம்பியுள்ளன. இதனால் புதினின் அறிவிப்பால் ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. ஜெர்மன் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக், புதினின் உத்தரவு ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறினார். ரஷ்ய எரிவாயு வாங்குபவர்கள் இதே கருத்தை எதிரொலித்துள்ளனர்.
ஆனால் இந்த விஷயத்தில் புதின் உறுதியாக உள்ளார். இதற்கு காரணம் ரஷ்யாவுடன் மற்ற வர்த்தகத்தையும் செய்தால் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு ரூபிள் கிடைக்க வாய்ப்புண்டு. பொருட்களை அனுப்பும் போது அதற்கு ரஷ்யாவிடம் இருந்து ரூபிளை பெற முடியும். அவ்வாறு பெறும் ரூபிளை கொண்டே பின்னர் ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு வாங்க முடியும்.
அதாவது ரஷ்யாவிடம் இருந்து தங்களுக்கு தேவையான எரிவாயுவை வாங்க ஐரோப்பிய நாடுகள் மற்ற வர்த்தகத்தை செய்தால் மட்டுமே சாத்தியம். வழக்கம்போல் மற்ற பொருட்களையும் ரஷ்யாவிடம் இருந்து வாங்குபவர்களால் மட்டுமே ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்ய இயலும்.
அவ்வாறு செய்வதன் மூலம் ரஷ்யா மீது பொருளாதார விதிக்கப்பட்ட பொருளாதார தடை என்பது தானாகவே இல்லாமல் போய் விடும் என்பதால் இதனை அதிபர் புதின் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு வாங்க ரஷ்யா இதுவரை செய்து கொண்ட ஒப்பந்தங்களுக்கும் இது பொருந்தும் எனவும் ரூபிள் வழங்கினால் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும் என்றும் புதின் அறிவித்துள்ளார். இதனால் தங்களது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்காக 40 சதவீதம் ரஷ்யாவையே நம்பி இருக்கும் ஐரோப்பிய நாடுகள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன.