ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
44வது செஸ் ஒலிம்பியாட் மாதிரி ஜோதி (சுடர்) கொண்டு செல்லும் விழிப்புணர்வு பேரணி கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் இன்று (ஜூலை 26) காலை தொடங்கியது.
இதில் ஸ்கேட்டிங் வீரர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மாதிரி ஜோதி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.
பேரணி தலைமை அஞ்சலகம், ஜவஹர் பஜார், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு மனிதர்களே சதுரங்க காய்களாக நிற்கும் சதுரங்க போட்டியினை தொடங்கி வைத்து, ஸ்கேட்டிங் வந்த மாணவ, மாணவிகள், செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது, ”கடந்த 2 நாட்களாக சமூக ஊடங்களில் ஒரு தவறான தகவல் பரவி வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி அதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் உலவி வருகிறது. நிச்சயமாக சொல்கிறேன். ஸ்மார்ட் மீட்டருக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படாது. ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் எதுவுமில்லை.
தமிழகத்தில் 2.37 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். இதில் 1 கோடி பேருக்கு எந்தவித கட்டண மாற்றமோ, எந்தவித கட்டண ஏற்றமோ, எவ்வித கட்டணமோ இல்லை. 101 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலான 63.35 லட்சம் நுகர்வோர்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என இரு மாதங்களுக்கு ரூ.55 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.1 என்பதை விட குறைவு.
கடந்த ஆட்சியில் ரூ.1.59 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதற்கு ஆண்டுக்கு வட்டி மட்டும் ரூ.16,500 கோடி. தமிழகத்தின் சொந்த மின் தேவையில் 3ல் ஒரு பங்கை ம ட்டும் சொந்தமாக உற்பத்தி செய்துக்கொண்டு 2 பங்கு மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கிக்கொண்டு மின் மிகை மாநிலம் என கூறி பொய்யாக கூறி வந்துள்ளனர்.
அப்படியென்றால் இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து 20 ஆணடுகளுக்கு மேல் காத்திருந்த 4.5 லட்சம் விவசாயிகளுக்கு ஏன் மின் இணைப்பு வழங்கவில்லை. நிர்வாக சீர் கேட்டால் மின்வாரியம் இழுத்து மூடும் நிலையில் இருந்தது. அதற்காக மின் கட்டண சீரமைப்பு செய்யப்பட்டது. இல்லாவிட்டால் மத்திய அரசு மானியம், வங்கிக் கடன் ஆகியவை பெற முடியாத நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் 2012, 13, 14 என 3 முறை 37 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஆனால், இன்றைக்கு தங்கள் ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்ற பொய்யான, தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கடந்த 2011ல் ரூ.410க்கு விற்பனையான சமையல் காஸ் சிலிண்டர் தற்போது ரூ.1,120க்கும், ரூ.54க்கு விற்பனை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்த்தும் போராட்டம் நடத்தியிருக்கலாமே. அதற்கு திராணியற்றவர்கள் மின் கட்டண உயர்வை மட்டும் எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். எந்தவித பாதிப்பும் இல்லாமல் தமிழகத்தில் மின் கட்டணம் சீரமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கரூர் மாமன்ற மேயர் கவிதா, எம்எல்ஏக்கள் குளித்தலை ரா.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.