“இலங்கையில் போராடும் மக்கள் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு கோஷம் எழுப்புகின்றனர். எனக்கு வீடில்லை. என் வீட்டை போராட்டக் காரர்கள் எரித்துவிட்டார்கள். ஒன்று அவர்கள் என் வீட்டைத் திருப்பிக் கட்டித் தர வேண்டும். இல்லாவிட்டால் தேசத்தை மீள்கட்டமைக்க உதவியாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சந்தித்திராத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது தீவு தேசமான இலங்கை. சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கைக்கு கரோனா ஊரடங்கு முதல் நெருக்கடியை தந்தது. அதனால், சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. இதற்கிடையே அரசியல் குழப்பங்களும் சேர்ந்து கொள்ள இலங்கை அரசு திவாலாகிவிட்டது.
இந்நிலையில் போராடங்கள் வலுக்க அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பி ஓடினார். சிங்கப்பூர் சென்ற பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வானார். ஆனாலும் இலங்கையில் காட்சிகள் மாறவில்லை.
அதிபர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். பிரதமராக, அதிபராக யார் அமர்ந்தாலும் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்வைக்கின்றனர்.இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கே போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கையில் போராடும் மக்கள் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு கோஷம் எழுப்புகின்றனர். எனக்கு வீடில்லை. என் வீட்டை போராட்டக் காரர்கள் எரித்துவிட்டார்கள். ஒன்று அவர்கள் என் வீட்டைத் திருப்பிக் கட்டித் தர வேண்டும். இல்லாவிட்டால் தேசத்தை மீள்கட்டமைக்க உதவியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து என்னைத் தொடர்ந்து வீட்டுக்குச் செல்லுமாறு கோஷம் எழுப்புவது நேரத்தை வீணாக்கும் செயல்.
போராட்டக்காரர்கள் தொடர்ந்து அமைத்திக்கு குந்தகம் விளைவிப்பதால் அரசாங்கத்தால் சர்வதேச நிதியத்திடமிருந்து உதவி பெறுவது தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. நாம் சந்தித்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் அனைத்துக் கட்சிகளும் ஒருசேர இணைந்து செயல்பட வேண்டும். அதைவிடுத்து முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவையோ இல்லை வேறு யாரையோ நெருக்கடிக்கு காரணமாக்கி அரசியல் செய்யும் நேரம் இதில்லை.
சர்வதேச நிதியத்தின் குறைந்தபட்ச உதவிகளைப் பெறுவதைக் கூட போராட்டக்காரர்களின் ஓயாத போராட்டங்கள் சிக்கலாக்கியுள்ளன. உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டன. இந்தச் சூழலில் நம் ஒரே நம்பிக்கை சர்வதேச நிதியம் தான். அந்த உதவி கூட நம் நாட்டை முழுமையாக மீட்டெடுக்காது. ஆனால், பிரச்சினைகளை சரி செய்ய வழிவகைகளை ஏற்படுத்தும். அதற்கு மக்கள் போராட்டங்களை கைவிடுத்து அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.