பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அரசு மீது, எதிர்க்கட்சியான லேபர் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் நிர்வாகத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டதால், 40-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அரசியல் நெருக்கடியை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் தான் பதவி விலகுவதாக அறிவித்தார். கன்சர்வேடிவ் கட்சியில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார். புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள், கன்சர்வேடிவ் கட்சியில் தீவிரமாக நடக்கின்றன.
இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியான லேபர் கட்சி கொண்டு வருகிறது. இதன் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு தொடர வேண்டுமா இல்லையா என அனைத்து கட்சி எம்.பி.க்களும் வாக்களிப்பர். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியடைந்தால், பிரிட்டன் தேர்தலை சந்திக்க நேரிடும்.
ரிஷி சுனக் தீவிரம்: கன்சர்வேடிவ் கட்சியில் போரிஸ் ஜான்சனுக்கு மாற்றாக, புதிய பிரதமராகும் போட்டியில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் உட்பட 11 பேர் உள்ளனர். பிரதமராக தேர்வாவது எளிதானது இல்லை என்றாலும், தற்போதைய நிலவரப்படி ரிஷி சுனக் முன்னணியில் உள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன்.
புதிய பிரதமர் யார் என செப்டம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படும். அதற்கு முன் கன்சர்வேடிவ் கட்சிக்குள் பல கட்ட தேர்தல் அடிப்படையில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார். இதில் போட்டியிட ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறைந்தது 20 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. இன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 30 ஓட்டுக்களுக்கும் குறைவாக பெறுபவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர். அடுத்த கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. பிரதமர் தேர்வுக்கான பல கட்ட தேர்தல் முடிய 2 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.