கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் மீதான நடவடிக்கையைத் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 18-ம் முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் பள்ளிகள் அறிவித்தன. அதேவேளையில், தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி 18-ம் தேதி மெட்ரிக் பள்ளிகள் 89 சதவீதம், நர்சரி மற்றும் ப்ரைமரி பள்ளிகள் 95 சதவீதம், சிபிஎஸ்இ பள்ளிகள் 86 சதவீதம் இயங்கின. அன்றைய தினம் 987 தனியார் பள்ளிகள் விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து விடுமுறை அளித்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, இந்த 987 பள்ளிகளுக்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதற்கு, 18-ம் தேதி விடுப்பை ஏதேனும் ஒரு சனிக்கிழமை மூலம் ஈடு செய்வோம் என்று தனியார் பள்ளிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 987 தனியார் பள்ளிகள் மீதான நடவடிக்கையை தவிர்க்க மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.