செய்திகள்தமிழ்நாடு

தமிழக காவல்துறையில் புதிய சீருடை ‘லோகோ’அறிமுகம்

தமிழக காவல் துறையில் முதல்முறையாக காவலர் முதல் டிஜிபி வரையிலான அனைவரது சீருடையிலும் ஒரே மாதிரியான அடையாள ‘லோகோ’ இடம் பெற உள்ளது.

தமிழ்நாட்டில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் காக்கி நிறச் சீருடை வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொருவருக்கும், அவரவர் அதிகாரம், அடிப்படைத் தகுதிகளுக்கு ஏற்ப சீருடை அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

அதன்படி, டிஜிபியின் தோள்பட்டையில் ஐபிஎஸ், அசோக சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாள், குறுந்தடி, தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐபிஎஸ் சின்னம், காலரில் ரிப்பன் இருக்கும்.

கூடுதல் டிஜிபியின் சீருடையில், தோள்பட்டையில் ஐபிஎஸ், அசோக சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாள், குறுந்தடி, தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐபிஎஸ் சின்னம் இருக்கும்.

இதேபோல, காவல் ஆய்வாளர்கள் சீருடையின் தோள்பட்டையில் டி.பி. (தமிழ்நாடு போலீஸ்), கயிறு, 3 ஸ்டார் இருக்கும். உதவி ஆய்வாளர்களுக்கு இரண்டு ஸ்டார், தலைமைக் காவலருக்கு 3 பட்டைகள் இருக்கும். இவ்வாறு, காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் முதல் டிஜிபி வரை, அனைத்துப் பிரிவு போலீஸாரின் நிலையைக் குறிக்கும் வகையில், சீருடை லோகோ அமைந்திருக்கும்.

எனினும், ஒட்டுமொத்தமாக தமிழக காவல் துறை என்பதைக் குறிக்கும் வகையில், தமிழக போலீஸாரின் சீருடையில் எந்த அடையாளமும் இல்லை.

எனவே, வட மாநிலங்களில் இருப்பதுபோல, மாநிலப் பெயரைக் குறிக்கும் வகையில், காவலர் சீருடையில் ஒரே மாதிரியான அடையாளம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதற்கு உரிய தீர்வுகாணும் வகையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழக காவல் துறையில் முதல்முறையாக காவலர் முதல் டிஜிபி வரை அனைவரது சீருடையிலும் ஒரே மாதிரியான அடையாள ‘லோகோ’ இடம் பெற உள்ளது.

அதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசியக் கொடி உள்ளிட்டவற்றுடன், ‘தமிழ்நாடு காவல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள அடையாளச் சின்னங்களுடன் கூடுதலாக இந்த லோகோவும் இடம்பெறும்.

அடுத்த மாதம் அறிமுகம்

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த லோகோ, தமிழக போலீஸார் அனைவரின் சீருடையின் இடது கை பகுதியில் ஜொலிக்க உள்ளது.

இந்த லோகோ வடிவமைப்பை, தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் செய்துள்ளார். ஏறத்தாழ 100 லோகோ-க்களுக்கு மேல் தயாரித்து, அவற்றை கூர்ந்து ஆராய்ந்து, அவற்றில் ஒன்றை தேர்வு செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூரில் தயாரான இந்த லோகோவை, போலீஸார் சீருடையில் ஒட்டிக்கொள்ளலாம். அல்லது குத்திக் கொள்ளலாம். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து, பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 1,305 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து மற்றும் புலனாய்வு காவல் நிலையங்கள் மற்றும் 27 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. தமிழக காவல் துறையில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 942 போலீஸார் பணிபுரிகின்றனர். இவர்களில் 23,542 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் கூடுதலாக ஒரே வகையான லோகோவை சீருடையில் பயன்படுத்த உள்ளனர். புதிய லோகோ வழங்கும் நிகழ்ச்சியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை அழைத்து தொடங்கி வைக்க ஏற்பாடு நடக்கிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button