Site icon ழகரம்

இந்தியாவில் பரவுகிறது புதிய வகை கரோனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் தகவல்

இந்தியாவில் BA 2.75 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனம் கேப்ரியேசஸ் கூறுகையில், “ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் BA.4, BA.5 வகை திரிபுகள் உள்ளன. இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் BA 2.75 என்ற திரிபு பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக உலகளவில் 30% தொற்று அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் 4ல் கடந்த வாரம் கரோனா தொற்று அதிகரித்துள்ளது” என்றார்.

உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியான சவுமியா செல்லமுத்து கூறுகையில், “BA 2.75 புதிய திரிபு இந்தியாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்து அது மேலும் 10 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இது தொடர்பான மரபணு பகுப்பாய்வு தகவல்கள் இப்போது தான் கிடைக்கப்பெற்று வருகிறது. இந்த புதிய திரிபில் ஸ்பைக் புரதத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இதன் போக்கை நாம் உற்று நோக்க வேண்டும். இந்த புதிய திரிபு தடுப்பூசி தரும் எதிர்ப்பாற்றலில் இருந்து தப்பித்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது, மருத்துவ ரீதியாக தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவான SARS-CoV-2 Virus Evolution (TAG-VE) என்ற அமைப்பு இந்த புதிய திரிபை கூர்ந்து நோக்கி வருகிறது. எந்த நேரத்தில் பழைய வைரஸைவிட மிகவும் வித்தியாசமான புதிய திரிபு கண்டறியப்படுகிறது என்பது உறுதியாகிறதோ அப்போது அது கவலைக்குரிய திரிபாக அறிவிக்கப்படும்” என்றார்.

கடந்த மார்ச் 2022ல் உலகளவில் கரோனா உச்சம் தொட்டது. அதன் பின்னர் ஜூலை 6ஆம் தேதியுடன் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தில் 4 வார பாதிப்பு அளவு மீண்டும் உயர்ந்துள்ளது. ஆனால் அதேவேளையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உலகளவில் உயிரிழப்பு விகிதம் 12% குறைந்துள்ளது. ஜூலை 3 2022ன் படி உலகம் முழுவதும் 54.6 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version