சென்னை அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க, நிலம் எடுப்பு தொடர்பாக பொதுமக்களை சமாதானம் செய்த பின்பே நிலம் எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். ஈரோட்டில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை அருகே பரந்தூர் விமான நிலையம் நிலம் எடுப்புதொடர்பாக, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், நிலம் எடுப்பு மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் இழப்பீடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்களை சமாதானம் செய்த பின்பே நிலம் கையகப்படுத்துவது குறித்து முடிவு எடுப்போம். சேலம் பசுமைவழிச் சாலை அமைப்பது மத்திய அரசின் பணி, அதற்கான முடிவை மத்திய அரசு தான் எடுக்கும். நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு பிரச்சினையில் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் விரைவில் தீர்வு காணப்படும்.
‘நம்மை காக்கும் 48 மணி நேரம்’ திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 148 பேருக்கு ரூ.19.33 கோடி ஒதுக்கப்பட்டு, விபத்துக்குள்ளானவர்கள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 678 மருத்துவமனைகள் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு ரூ.103.36 கோடி செலவு செய்து, உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றார்.