நீட் தேர்வு மட்டுமே ஒரு மாணவரைதகுதியான மருத்துவராக உருவாக்காது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் 186-வது இளநிலை மருத்துவப் படிப்பு நிறைவு விழா சென்னைபல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இளநிலை மருத்துவ படிப்புகளை முடித்த 250 மாணவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 20 பேருக்கு பதக்கங்கள் வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் 578 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 70 கல்லூரிகள் (36 அரசுக் கல்லூரிகள் உட்பட) உள்ளன. உலகின் மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் முதல்100 இடங்களில் சென்னை மருத்துவக் கல்லூரி 60-வது இடத்தில் உள்ளது.
நீட் மட்டும்தான் தகுதியான மாணவர்களை உருவாக்கும் என்று பலரும் கூறுகின்றனர். நீட் தேர்வு இல்லாவிட்டாலும் நாங்கள் சிறந்தவர்கள்தான் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வில் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் இ.தேரணிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
36 பதக்கங்கள் பெற்று சாதனை
மருத்துவத் துறையில் உள்ள19 பாடப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய மாணவர் பிரசாந்த் 36பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றிலேயே இது அதிகம். ‘‘என் அப்பா, பாட்டிக்கு புற்றுநோய் இருந்தது. அம்மாவுக்கு மருத்துவப் பிரச்சினை இருந்ததால்தான்மருத்துவம் படிக்க ஆசைப்பட்டேன். தொடர்ந்து, சிவில் சர்வீஸ்படிப்பை முடித்து ஐஏஎஸ் அதிகாரிஆவேன்’’ என்று அவர் கூறினார்.