செய்திகள்இந்தியாஉலகம்

நூபுர் சர்மா பேச்சால் நீளும் பிரச்சினை: தொடரும் இஸ்லாமிய நாடுகளின் கண்டனம்

நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் கூட இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய நாடுகளின் பட்டியல் நீள்வது நின்றபாடில்லை. நேற்று (திங்கள் கிழமை) பஹ்ரைன், பாகிஸ்தான், தாலிபான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜிசிசி நாடுகளான குவைத், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், யுஏஇ.,யுடன் இந்தியா கடந்த 2020-21 காலகட்டத்தில் 90 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. ஜிசிசி நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். வசிக்கின்றனர். பிரதமரமாக பதவியேற்ற பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் மோடி இந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக் கருத்துகளால் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கத்தார் தொடங்கி மாலத்தீவு வரை: இந்த விவகாரத்தில் கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஞாயிற்றுக் கிழமையன்று கண்டனம் தெரிவித்தன.

இதற்கு பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவு அமைச்சகம், “இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறோம். இது குறுகிய மனப்பான்மை கொண்ட தேவையற்ற விமர்சனங்கள். இந்திய அரசு எல்லா மதங்களையும் மாண்புடன் அணுகுகிறது.

முகமது நபிகள் பற்றிய சில அவதூறான ட்வீட்களும், கருத்துகளும் தனி நபர்களால் முன்வைக்கப்பட்டவை. அவர்கள் நிச்சயமாக தேசத்தின் கருத்தை தெரிவிக்கவில்லை. மேலும், அவ்வாறு பேசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அவர்கள் சார்ந்த கட்சி எடுத்துள்ளது.

அப்படியிருந்தும், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைமைச் செயலகமானது, உள்நோக்கத்துடன் கூடிய தவறான, விமர்சனங்களை முன்வைக்கிறது. இது சிலரின் தூண்டுதலின் பேரில் எடுக்கப்படும் பிரிவினை முயற்சி என்றே தோன்றுகிறது. எனவே இதுபோன்ற சர்ச்சைகளை நிறுத்திக் கொள்ளுமாறு, மதவாத பார்வையுடன் பிரச்சினையை அணுகாமால் எல்லா மதங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் அதற்கான மரியாதையை உரித்தாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தது.

ஆனால், நேற்று (திங்கள் கிழமை) ஈரான், ஈராக், பஹ்ரைன், பாகிஸ்தான், தாலிபான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், லிபியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுவரை மொத்தம் 15 இஸ்லாமிய நாடுகள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

பாகிஸ்தானுக்கு பதிலடி: இதில் பாகிஸ்தானின் கண்டனத்திற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. “இந்தியாவைக் கண்டிக்கும் பாகிஸ்தான் முதலில் அங்கு வசிக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான், தங்கள் நாட்டில் வசிக்கும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, நல்வாழ்வில் கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாகிஸ்தானால், இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், அகமதியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் எத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளாகினர் என்பதற்கு உலகமே சாட்சியாக உள்ளது.

ஆனால், இந்தியா, பாகிஸ்தானுக்கு நேர் எதிராக மாறுபட்டது. பாகிஸ்தானில் மதவெறியர்களைப் புகழ்ந்து, அவர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்து வருகிறது. எனவே, பாகிஸ்தான், தங்கள் நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, நல்வாழ்வில் கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கவனம் பெறாத பயணம்: இந்த சர்ச்சையால் குடியரசு துணைத் தலைவரின் கத்தார் பயணம் கவனம் பெறாமலேயே நேற்று மாலை முடிவுக்கு வந்தது. கலாச்சாரம், உணவு, சினிமா என்ற மூன்ற விஷயங்களில் எப்படி இந்தியாவும், கத்தாரும் இணைந்திருக்கின்றன என்ற கருத்தாக்கத்துடன் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

யார் இந்த நூபுர் சர்மா! நூபுர் சர்மா ஒரு வழக்கறிஞர். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு லண்டனில் சட்ட மேற்படிப்பு படித்தார். 2008ல் தான் அரசியலில் அடியெடுத்து வைத்தார். பாஜக இளைஞரணித் தலைவரானார். பின்னர், 2015 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து அவர் தெரிவித்த கருத்து ஒன்று உலகளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தன்னுடைய கருத்து உள்நோக்கத்துடன் கூறப்படவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறி டெல்லி போலீஸில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button