நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை வாங்கியதில் நடந்த நிதிமோசடி தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதை கண்டித்து காங்கிரஸார் நேற்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் 5,000 பேரை பங்குதாரர்களாக இணைந்து கடந்த 1937-ம் ஆண்டு தொடங்கினார். இந்த பத்திரிகையை அசோசியேட்டட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம்(ஏஜெஎல்) நடத்தி வந்தது. அப்போது இது எந்த ஒரு தனிநபருக்கும் சொந்தமானதாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையாக செயல்பட்டு வந்தது. இந்த பத்திரிகையின் கடன் சுமை ரூ.90 கோடிக்குமேல் அதிகரித்ததால், கடந்த 2008-ம்ஆண்டு இந்த பத்திரிகை மூடப்பட்டது.கடந்த 2010-ம் ஆண்டு இதன் பங்குதாரர்களின் எண்ணிக்கை 1057-ஆக சுருங்கியது. ஏஜெஎல் நிறுவனத்தின் கடனை அடைத்துமீண்டும் பத்திரிகையை தொடங்க, காங்கிரஸ் கட்சி சார்பில் கடன் அளிக்கப்பட்டது.
அதன் பின் ‘யங் இந்தியா’ என்ற நிறுவனம், கடந்த 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு 76 சதவீத பங்குகள் உள்ளன. எஞ்சிய 24 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸிடம் உள்ளன.
கடந்த 2011-ம் ஆண்டில் யங் இந்தியா நிறுவனம் ரூ.50 லட்சத்தை செலுத்தி, ஏஜெஎல் நிறுவனத்தின் பல கோடி மதிப்பிலான சொத்துகளின் பங்குகளை கையகப்படுத்தியது சட்டவிரோதம் என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதனால் அமலாக்கத்துறை கடந்த 2014-ம் ஆண்டு யங் இந்தியா நிறுவனம் மீது நிதி மோசடி விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை சமீபத்தில் நீண்ட விசாரணை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம்விசாரணை நடத்த சமீபத்தில் 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றதால், முந்தைய சம்மன்களில் ஆஜராவதில் இருந்து சோனியா விலக்கு கோரியிருந்தார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி நேற்றுமதியம் 12.10-க்கு ஆஜரானார். அவருடன்ராகுல் காந்தியும், பிரியங்கா வத்ராவும்உடன் வந்தனர். சிறிது நேரத்தில், அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தை விட்டு ராகுல் வெளியேறினார். பிரியங்கா மட்டும் சோனியாவுக்கு தேவையான மருந்துகளுடன் உடன் இருந்தார். கூடுதல் இயக்குநர் மோனிகா சர்மா தலைமையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் அடங்கிய குழு சோனியாகாந்தியிடம் விசாரணை நடத்தியது. அவரிடம் 50 கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ராகுல் காந்தியிடம் 5 நாள்விசாரணையில் கேட்கப்பட்ட அதே கேள்விகளே, சோனியாவிடமும் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரவிசாரணைக்குப்பின் சோனியா காந்திஅமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறினார். அவரை வரும் திங்கட்கிழமை (ஜூலை 25) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் போராட்டம்: அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல்என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்த விசாரணையை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும்நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘அமலாக்கத்துறையின் துஷ்பிரயோகத்தை நிறுத்துங்கள்’ என போராட்டக்காரர்கள் பதாகைகளை தாங்கியிருந்தனர். டெல்லியில் போராட்டம் நடத்த திரண்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீஸார் தண்ணீர்பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றனர்.
போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அஜய் மாக்கன், மாணிக்கம் தாகூர், கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சசி தரூர், சச்சின் பைலட், ஹரீஷ்ராவத் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 75 பேர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து ட்விட்டரில் ப.சிதம்பரம்விடுத்துள்ள செய்தியில், “சோனியா காந்திக்கு விடுக்கப்பட்ட அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். ஏஜேஎல் – யங் இந்தியா நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை வருமானவரி கணக்கு தாக்கலில் இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. அமலாக்கத்துறையினர் விரும்புவது எல்லாம் அந்த ஆவணங்களில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் இரு சக்கர வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. மற்றொருஇடத்தில் கார் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் ரயில்களையும் போராட்டக்காரர்கள் நிறுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்டபேட்டியில், “காங்கிரஸ் கட்சியையும், காந்தி குடும்பத்தையும் புரிந்துகொள்ள பாஜகவினர் பல முறை பிறக்க வேண்டும்” என்று கூறினர்.